பூக்கள்...

வள்ளுவன் வாக்கை போல, இசை என்பது இனிதானது. அதைவிட இனிமையானது தான் பெற்றெடுத்த பிள்ளையின் மழலை சொல். எத்தனையோ பூக்களை புகைபடத்தில் அல்லது இயற்கையாய் பார்த்தாலும் மனதுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் நம் கையால் நட்டு வைத்து, சற்று வளர்ந்து பூக்கும் பூவிதழ்களை காணும் சமயம் இதயத்தில் உண்டாகும் ஆனந்தமானது எல்லையற்றது உண்மையாகும்.

அதனை உணர்ந்தேன் சிலநாட்களுக்கு முன்பு. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் பரமானந்தம் அடைவேன் என்ற நம்பிக்கையோடு. என் எழுத்தின் வழியே உங்களை அவ்வாறு இக்கணம் இழுத்து செல்லாவிடினும் உங்கள் மனதில், ஒரு பூந்தொட்டியில் நீங்களும் செடி வளர்த்து அதன் மலர்முகத்தை காணவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அதுதான் என் நோக்கம்.

இதோ!

அவளை கண்ட முதல்நாள் போல், வாசலில் தள்ளுவண்டியில் பலவிதமான பூந்தொட்டிகளை வரிசையாய் அலங்கரித்து அதனை விற்று சென்ற காட்சியனது கல்லூரி வாசலில் கூடும் பருவ பெண்களை பார்த்த ஒர் ஏக்கம். கூட்டத்தில் நெரிசலில் முதல்நாள் நான் கண்ட  அவளின் முகத்தை போல் நான் பார்த்த அந்த செடியின் மீது மயக்கம் என்னுள் தோன்றியது.

அடைந்தாள் அவளை அடைய வேண்டும் என்நினைக்கும் மனதைபோல, அந்த செடியை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வேர் ஊன்றியது. அவள் கேட்பதெல்லாம் வாங்கி தரவேண்டும் என்ற நினைப்பு போல் அந்த செடி விற்பவன் சொன்ன விலைக்கு மறுப்பு ஏதும் பேசாமல் வாங்கிவந்தேன்.

அவள்மீது கொண்ட காதலை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததைபோல், நான் வாங்கி வந்த செடியினை வைக்க இடமில்லாமல் யோசித்தேன். நண்பர்களுக்கு பிறகு உடன்பிறப்புகளுக்கு தெரியவருவதைபோல தோட்டமில்லாமல் என் வீட்டின் முன்முற்றத்தில் இடமிருப்பதை நினைவில்கொண்டேன்.அங்கே அதற்கோர் இடமளித்தேன், என் இதயத்தில் அவளுக்கு அளித்தைபோல்.

தினமும் காலையும் மாலையும் அவளை காண செல்வதைபோல, இருவேளையும் தண்ணீர் ஊற்றி தொட்டியில் செடியையும் மனதில் அவள் நினைவுகளையும் கொண்டேன். அவளைகாணாமல் என்மனம் என்ன பாடுபடுமோ அதுபோல் வெயில் அடித்தால் எங்கிருந்தாலும் ஏங்குவேன். அவள் முகம் பார்க்க துடிக்கும் சமயம் போல், சூரியன் எப்ப மறைவான் என்று தவித்தேன் பலநாட்கள்.

அவளின் பார்வையும் என்மேல் விழுந்த மகிழ்ச்சிபோல், செடியில் தோன்றிய முதல் மொக்கினை கண்டு மகிழ்ந்தேன். என்னுள் காதல் வளர்ந்தது போல் மொக்கும் பூக்கும் நாள்வந்தது. என்காதலும் வீட்டிற்கு தெரியவந்தது போல்.

இரவெல்லாம் கண்விழித்து சூரியன் எப்போ வருவான் என்று பதறினேன். நான் அவளை பெண் பார்க்க செல்ல துடித்த நாழிகை போல். கதவை திறந்து மெல்ல எட்டி பார்த்தேன், பெண் காப்பி கொண்டுவரும் நிகழ்ச்சி போல். பூத்திருக்கும் அந்த மஞ்சள் நிற மலரை கண்டது, பெண்ணிடம் தனியாக ஏதோ பேசி விட்டு மனம் கலந்து சம்மதம் பெற்றதை போல்.

கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாதங்கள் கழிந்தது போல, நாட்கள் நகர தொடங்கியது, எனக்கு பிறந்த ஒர்குழந்தையை போல செடியில் இரண்டு, மூன்று என பூக்க தொடங்கின. குழந்தையின் மழலைசொல் போல பூக்களின் வாசம் என்னுள் வீசியது.

இன்றும் வீசிக்கொண்டே... உங்களின் வாழ்கையிலும் வீசிட...

இவன்,
தஞ்சை.வாசன்.

2 comments:

அண்ணாமலையான் said...

இந்த பூக்களைப்போல அழகான பதிவு.. வாழ்த்துக்கள்...

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள அண்ணாமலையானுக்கு,

உங்கள் வரிகள் முதலவதாக என்னை அடைந்த்தில் பெரும் மகிழ்ச்சி. ஏனெனில் அந்த திருவண்ணாமலையானே கூறியதைபோல.

நன்றிகள் என்றென்றும்...

Post a Comment